காசியில் அஸ்தி கரைத்தல் - புரோகிதர் துணையின்றி செய்யும் முறை
முன்னேற்பாடு
முதலில் அஸ்தி பானையை படியில் வைக்கவும் .
பூஜைக்கு தேவையான பொருட்களை அதன் அருகில் வைக்கவும் .
கங்கையில் தலை மூழ்கி குளிக்கவும் பிறகு நெற்றியில் குல வழக்கப்படி விபூதி அல்லது நாமம் இடவும் .
ஈரத்துணியுடன் மந்தார இலை மீது சிறிதளவு தர்பையை பரப்பி அதன் மீது அஸ்தி பானை வாயை திறந்து வைக்கவும்.
அஸ்தி பானைக்கு முன்னால் ஒரு இலை போடவும் அதில் வெற்றிலை 2, பாக்கு 2, பழம் 2, ஒரு ரூபாய் காசு வைக்கவும்
வீட்டில் உறவினர்கள் தந்த சில்லரை காசுகள், வில்வம், சிறதளவு தர்பை ஆகியவற்றை அஸ்தி பானையில் போடவும்
படையல்
இறந்தவருக்கு பிடித்த பழங்கள், இனிப்பு, காரம் ஆகியவற்றை இலையில் வைக்கவும் .
அவர் பயன்படுத்திய துணிகளை இலையில் வைக்கவும் .
தானம்
வெற்றிலை 2, பாக்கு2, பழம்1 அதன் மீது ரூபாய் 101 தட்சணையை இலைக்கு முன்னால் வைக்கவும். (பூஜை முடிந்த பிறகு எதிரில் தென்படும் சம்பாதிக்க இயலாத ஒரு முதியவருக்கு தானம் செய்யவும் )
வழிபாடு
இறந்தவரை மனதில் தியானித்து பின் வருமாறு வழிபடவும்
மூக்கு - மூக்கிற்கு வாசைனையாக ஊதுபத்தி ஏற்றி அஸ்தி கலசத்திற்கு காட்டவும்
காது - செவிற்கு இனிமையாக தேவாரம், சிவபுராணம், திவ்யப்பிரபந்தம் பாடவும் (புத்தகம் வைத்தும் பாடலாம்)
வாய் - வாய்க்கு சுவையாக படையலில் உள்ள அனைத்து உணவு பொருட்களை ஏற்றுக்கொள்ளுமாறு பாவனை செய்யவும்1 டம்ளர் கங்கை நீரை கலசத்தின் அருகில் வைக்கவும் .
அரவணைப்பு (தொடு உணர்வு) -அஸ்தி கலசத்தை கைகளால் தொட்டு இறந்தவரின் பாதத்தை தொடுவதாக நினைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தவும்.
கண் - கண்களுக்கு மோட்ச தீபம் அஸ்தி கலசத்திற்கு கற்பூர தீப ஆராதனை செய்யவும்
பிரார்த்தனை- கையில் வில்வம், துளசியை வைத்து கொண்டு கலசத்தை நோக்கி இறந்தவரை மனதில் தியானித்து அவர் நற்கதி அடைய வேண்டும், பாவங்கள் நீங்கி இறைவனடி சேர வேண்டும், மீண்டும் நற்பிறவி எடுத்தால் இதே குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டி கையில் உள்ள வில்வம், துளசியை அஸ்தி கலசத்தில் போடவும்.
அஸ்தி கரைக்கும் முறை
அஸ்தியை தலையில் வைத்து கொண்டு சிவ சிவ, நாராயணா நாராயணா என்று கூறி கங்கையில் இடுப்பு அளவு நீரில் இறங்கவும், தலையிலிருந்து இறக்கி இடது கையில் ஏந்தவும்
வலது கையில் முதலில் கபால ஓட்டை (தலை எலும்பு) வில்வம், தர்பையும் சேர்த்து வைத்து கொண்டு சிவ சிவ என்று கூறி மோட்சம் அடைவாயாக என்று சொல்லி கங்கையில் கரைக்கவும்.
மற்ற எலும்புகளையும் வில்வம் தர்பை சேர்த்து கங்கையில் கரைக்கவும்.
அஸ்தி பாத்திரத்தை சுத்தம் செய்து கரையில் வைக்கவும்.
ஒரு சொம்பு கங்கை நீரை இடது கையில் வைத்து கொண்டு வலது கையில் எள்ளையும், தர்பையையும் எடுத்து கொண்டு கோத்திரம், இறந்த மூன்று தலைமுறை மற்றும் மூதாதையர்கள் பெயரை சொல்லி கங்கையில் எள், தண்ணீர் விடவும். (தர்ப்பணம் செய்வது போல்)
இறந்தவரின் துணிகளை கங்கையில் விடவும் .
மோட்சதீபம்
நெய் தீபத்தை பாக்கு தொன்னையில் வைத்து ஓடும் கங்கை நீரில் விடவும், தீபத்தை தரிசனம் செய்து மோட்சம் அடைவாயாக என்று கூறி பிரார்த்திக்கவும்
கங்கையில் தலை குளிக்கவும், குல வழக்கப்படி விபூதி அல்லது நாமம் இடவும், சாதாரணமாக உடை உடுத்திக்கொண்டு விச்வநாதரை தரிசிக்கவும்
படையலில் உள்ள பிரசாதத்தை சிறிதளவு உண்ணவும். மற்ற பிரசாதத்தை ஒரு பையில் போட்டு தானத்திற்கு வைத்த தட்சனையுடன் தானம் செய்யவும் .
கோவில் அருகே விஷ்ணுபாதம் தகடு வாங்கவும், பிறகு சங்கரமடம் சென்று அன்னதானத்திற்கு தங்களாலான தொகையை தர்மம் செய்யவும்
தங்கும் இடம் சென்று பொருட்களை எடுத்து கொண்டு, ஓட்டலில் சைவ உணவு சாப்பிடவும், பிறகு ரயில் நிலையம் வரவும்.
காசி சங்கர மடம் முகவரி :
சங்கரமடத்தில் தங்கும் வசதி உள்ளது, மேலும் கங்கை கரையின் மிக அருகில் அமைந்துள்ளது, முன்னதாக தொலைபேசியில் பதிவு செய்யவும்.